செய்திகள்
கான்சாபுரத்தில் பூட்டிக்கிடக்கும் நெல் கொள்முதல் நிலையம்.

பூட்டிக்கிடக்கும் நெல் கொள்முதல் நிலையம் பயன்பாட்டுக்கு வருமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2021-01-02 09:18 GMT   |   Update On 2021-01-02 09:18 GMT
வத்திராயிருப்பு அருகே பூட்டிக்கிடக்கும் நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கான்சாபுரம், கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர், சுந்தரபாண்டியம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் விளைந்து ஒரு சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராகவும், ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்தபகுதியில் அறுவடை செய்யப்படும் நெல்களை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு ஓரளவிற்கு லாபம் கிடைக்கும்.

இந்நிலையில் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கான்சாபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அப்பகுதி விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் ஒரு மூடை ரூ. 1,350 போகவேண்டிய நிலையில் இடைத்தரகர்கள் வெறும் ரூ. 1,100 மட்டுமே நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் இல்லை.

ஆதலால் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News