செய்திகள்
சேதமான நெற்பயிர்கள்.

சேத்தூர் அருகே மழையால் நெற்பயிர்கள் சேதம்- விவசாயிகள் கவலை

Published On 2021-01-02 07:36 GMT   |   Update On 2021-01-02 07:36 GMT
சேத்தூர் அருகே மழையால் நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தளவாய்புரம்:

சேத்தூர் அருகே உள்ள கோவிலூர், தேவதானம் கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் பயிரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பகல் முதல் இரவு வரை மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. இந்த தொடர் மழையினால் இப்பகுதியில் உள்ள அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.

இதுபற்றி கோவிலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் ராமர், பாஸ்கர் ஆகியோர் கூறியதாவது:-

நாங்கள் இந்த ஆண்டு இளம் வித்து எனும் நெற்பயிரை கடந்த 70 நாட்களுக்கு முன்பு பயிரிட்டுஉள்ளோம். மற்றவர்கள் கர்நாடக பொன்னி என்ற நெற்பயிரை பயிரிட்டுள்ளனர். எங்கள் நெற்பயிர் விளை காலம் 90 நாட்கள் மட்டுமே. மற்றவர்களுக்கு 120 நாட்கள். எங்கள் வயல் காட்டில் தற்போதுதான் நெற்கதிர்கள் விளைச்சல் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையினால் எங்கள் வயலில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.

வயலில் தேங்கியுள்ள மழை நீரை நேற்று வெளியேற்றும் பணியில் ஈடுபட்டோம். இன்னும் 2 வாரத்தில் இதனை அறுவடை செய்யும் காலம் ஆகும்.

இந்த இரண்டு வாரத்துக்கு இங்கு மழை பெய்யாமல் இருந்தால் இந்த மீதமுள்ள நெற்பயிர்களை காப்பாற்ற முடியும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News