செய்திகள்
டைரி

கொரோனா ஊரடங்கால் தயாரிப்பு பணி பாதிப்பு: டைரிகள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம்

Published On 2021-01-01 14:12 IST   |   Update On 2021-01-01 14:12:00 IST
கொரோனா ஊரடங்கு காரணமாக டைரி உற்பத்தி குறைந்ததால் பெரும்பாலானோர் நண்பர்கள், உறவினர்களுக்கு டைரி கொடுக்க முடியாமல் போய் விட்டது.
விருதுநகர்:

வழக்கமாக புத்தாண்டு தொடங்கினால் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதோடு டைரிகளையும் கொடுப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக டைரி உற்பத்தி குறைந்ததால் பெரும்பாலானோர் நண்பர்கள், உறவினர்களுக்கு டைரி கொடுக்க முடியாமல் போய் விட்டது.

தமிழகத்தில் பட்டாசு நகரமாக திகழும் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஏராளமான டைரி உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. வழக்கமாக ஜூன் மாதம் இவர்கள் டைரி உற்பத்தியை தொடங்குவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உற்பத்தியாளர்கள் டைரி தயாரிப்பு பணியை ஒத்திவைத்தனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகு தான் அவர்கள் டைரி உற்பத்தியை தொடங்கினார்கள். இந்த ஆண்டு காகித விலை குறைந்தாலும் டைரி உற்பத்தி விலை குறையவில்லை.

அதே சமயம் தேவை அதிகமாக இருந்த போதிலும் டைரி உற்பத்தி தாமதமாக தொடங்கியதால் 50 சதவீதம் டைரிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இதனால் முழுமையாக டைரி உற்பத்தியை பூர்த்தி செய்ய முடியவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை பெரிய டைரி உற்பத்தியாளர்களிடம் டைரிகளை கொள்முதல் செய்வார்கள்.

இந்த ஆண்டும் பல நிறுவனங்களிடம் இருந்து டைரி ஆர்டர்கள் வந்த போதிலும் உற்பத்தியாளர்களால் குறித்த நேரத்தில் டைரிகளை தயாரித்து வழங்க முடியாமல் போய் விட்டது. இதனால் டைரி உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதே போல் பல நிறுவனங்கள் மற்றும் கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டைரிகளை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடைகளுக்கும் குறைந்த அளவே டைரிகள் விற்பனைக்காக வந்துள்ளன. இந்த டைரிகளும் வேகமாக விற்பனை ஆனதால் டைரிகள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டாவது தங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையில் டைரி உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

Similar News