பவானி சுற்று வட்டார பகுதிகளில் பொங்கல் தொகுப்பு பை தயாரிக்கும் பணி தீவிரம்
பவானி:
தமிழக அரசு சார்பில் தை பொங்கலையொட்டி 2.06 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கம், முழு கரும்பு, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவை வழங்கப்பட உள்ளது.
இதற்காக துணிப்பைகள் தைக்கும் பணியில் ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கஞ்சி போடப்பட்ட காடா துணி வாங்கப்பட்டு எந்திரம் மூலம் 12 இஞ்ச் அகலம், 14.5 இஞ்ச் உயரத்துக்கு எந்திரத்தில் வெட்டப்படுகிறது. பின்னர் தமிழக அரசு அறிவித்துள்ளபடி பிரிண்டிங் செய்யப்பட்டு தையல் தொழிலாளர்களிடம் தைப்பதற்கு கொடுக்கப்படுகிறது.
இந்த பைகள் 10 கிலோ வரை எடை தாங்கும் அளவிற்கு கைப்பிடிகள் தைக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் பைகள் தைக்கும் பெண்களுக்கு பைக்கு ரூ.1 வீதம் கூலியாக வழங்கப்படுகிறது. இந்த பைகள் ஏஜெண்ட்கள் மூலம் சேகரிக்கப்பட்டு ரேசன் கடைகளுக்கு வழங்கப்படுகிறது.
வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருப்பதால் பைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பவானி மட்டுமின்றி சுற்றுபுற பகுதிகளான மேட்டூர், மயிலம்பாடி, பருவாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் பைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
கொரோனா காலத்தில் மாஸ்க் தயாரிக்கும் ஆர்டர் கிடைத்தது. தற்போது பொங்கல் பை தைக்கும் ஆர்டர் கிடைத்துள்ளதால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு பெருந்துறை ரோடு டீச்சர்ஸ் காலனி அருகே உள்ள மாவட்ட மொத்த கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் ஏலக்காய், முந்திரி, திராட்சை, பேக்கிங் பணி தொடங்கியது.
முந்திரி, திராட்சை தலா 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் எடை போட்டு தனித்தனியாக பேக்கிங் செய்யும் பணி நடந்து வருகிறது. இங்கு பேக்கிங் செய்யப்படும் இந்த பொங்கல் பொருட்கள் சிந்தாமணி கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட 25 ரேசன் கடைகளில் உள்ள சுமார் 75 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் மற்ற கூட்டுறவு சங்கங்களிலும் பொங்கல் பொருட்கள் எடை போட்டு பேக்கிங் செய்யும் நடந்து வருகிறது.