செய்திகள்
புதுவை கவர்னர் கிரண்பேடி

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது அவசியம்- கவர்னர் கிரண்பேடி

Published On 2020-12-30 09:34 GMT   |   Update On 2020-12-30 09:34 GMT
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:

கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடுவது தொடர்பாக கவர்னர் கிரண்பேடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து ஏற்கனவே கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில் புதிய கொரோனா பரவுவதால் ஜனவரி 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசின் கடிதத்தை வெளியிட்டு கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதனை காவல்துறை, நகராட்சிகள், வர்த்தகர்கள், மக்கள் பிரதிநிதிகள், மருத்துவ வல்லுனர்கள் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

இதை மாற்றி செய்பவர்கள் அதற்கான விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். மக்களும் தங்களை பாதுகாப்புடன் பார்த்துக்கொள்வது நல்லது. குறிப்பாக நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை பின்பற்றவேண்டும். இது வர உள்ள புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு மிகமிக அவசியம்.

இதற்கான உத்தரவினை மத்திய அரசு அனைவருக்கும் வினியோகித்துள்ளது. அனைத்து வழிகாட்டுதல்களும், நீதிமன்ற அறிவுறுத்தல்களும் விளக்கப்பட்டு தெளிவுபடுத்தப்படுகிறது. கலெக்டர்கள் மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள்தான் சட்ட அமலாக்க உத்தரவினை நடைமுறைப்படுத்தும் பொறுப்பாளர்கள் ஆவர். சட்டம், விதிமுறைகள், நீதித்துறை வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதில் உறுதியாக இருங்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News