செய்திகள்
வழக்கு பதிவு

கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2020-12-25 12:58 IST   |   Update On 2020-12-25 12:58:00 IST
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற போது கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாம்பவர்வடகரை:

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஆணைகுளம் பகுதியில் சட்ட விரேதாமாக சிலர் மணல் கடத்தி வருவதாக புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து ஆணைகுளம் கிராம நிர்வாக அலுவலர் வெள்ளப்பாண்டி, உதவியாளர் ஜேம்ஸ் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சிலர் டிராக்டரில் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். விசாரணையில் அவர்கள் சுரண்டை அருகே உள்ள அம்மையபுரம் வடக்குவாச்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி சித்திரைக்கனி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தாசன் (50) என்பது தெரியவந்தது.

அப்போது கிராம நிர்வாக அலுவலருக்கும் மணல் அள்ளியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த முருகன் மணல் அள்ளும் மண் சட்டியால் வெள்ளப்பாண்டியை தாக்கினர்.

இதுதொடர்பாக அவர்கள் சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் கணவன்-மனைவி உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்கள்.

மணல் அள்ளியவர்களை தடுக்க சென்ற அலுவலர்களை தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Similar News