செய்திகள்
பென்னாகரத்தில் பெண் போலீஸ் ஏட்டுவை மிரட்டிய வாலிபர் கைது
பென்னாகரத்தில் பெண் போலீஸ் ஏட்டுவை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பென்னாகரம்:
பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி செய்து வருபவர் கலையரசி (வயது 41). இவர் நேற்று முன்தினம் பென்னாகரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது டிப்டாப் உடையுடன் அங்கு வந்த ஒரு வாலிபர், மேடம் உங்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதிகா சான்றிதழ் வழங்க அழைத்து வருமாறு கூறினார் என்று தெரிவித்தார்.
இதனால் அந்த வாலிபரிடம் சில நிமிடங்கள் பேசிய ஏட்டு கலையரசிக்கு அந்த நபர் மீது சந்தேகம் வந்தது. இதனால் அவரை பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த வாலிபர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சங்கர் நகரைச் சேர்ந்த சின்னையா மகன் பெரியசாமி (29) என தெரியவந்தது. மேலும் அவர் கடந்த மாதம் 22-ந்் தேதி ஏட்டு கலையரசிக்கு போன் செய்து நான் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதிகா பேசுகிறேன் என்று பெண் குரலில் வீடியோ காலில் பேசி மிரட்டியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பெண் போலீஸ் ஏட்டை மிரட்டிய பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.