செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த ஆட்டோ டிரைவர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்

Published On 2020-12-18 02:16 GMT   |   Update On 2020-12-18 02:16 GMT
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் கார் நிறுத்தும் இடத்தில் நேற்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் அங்கு வந்த ஒருவர் திடீரென தான் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கவனித்த அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் லதா, பிரேமா ஆகியோர் ஓடி வந்து, அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை தட்டி விட்டு, தீப்பெட்டியை பறிக்க முயன்றனர். ஆனால் அவர், தீப்பெட்டியை கொடுக்காமல் கையில் இறுக்கி வைத்துக் கொண்டார்.

உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடமிருந்த தீப்பெட்டியை பறிமுதல் செய்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் கே.வி.குப்பம் அருகே மேல்மாயில் ரோடு வடுகந்தாங்கல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான தண்டபாணி (வயது 46) எனத் தெரிய வந்தது.

தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தண்டபாணி கூறுகையில், எனக்கும் எனது உறவினர் ஒருவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் தகராறு ஏற்பட்டது. அதில் அவர் என்னை தாக்கினார். இதுகுறித்து நான் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றேன். அங்கு, பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் எனது புகாரை ஏற்க மறுத்து, உறவினருக்கு சாதகமாகப் பேசினார்.

மேலும் என் மீது கஞ்சா உள்ளிட்ட பொய் வழக்குகள் பதிவு செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இதையடுத்து சத்துவாச்சாரி போலீசார் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை போலீசார் சோதனை செய்து, அதன் பிறகு உள்ளே அனுமதிப்பார்கள். ஆனால் நேற்று தண்டபாணி மண்எண்ணெய் பாட்டிலை யாருக்கும் தெரியாமல் உள்ளே கொண்டு வந்துள்ளார். போலீசார் சரியாக சோதனை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. பெண்களை சோதனை செய்வதற்காக அமைக்கப்பட்ட மறைவான அறை பயன்படுத்தாமலேயே உள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அனைவரையும் சோதனை செய்து உள்ளே அனுமதிக்க வேண்டும், எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தண்டபாணி தீக்குளிக்க முயன்ற சம்பவத்துக்கு பிறகு கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அங்கு வந்த பொதுமக்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News