செய்திகள்
நீதிமன்றம்

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 10 ஆண்டு சிறை- வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2020-12-15 19:20 IST   |   Update On 2020-12-15 19:20:00 IST
விறகுக்கடை நடத்தும் பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வேலூர்:

வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் அமுதா (வயது 55). இவர், அதே பகுதியில் விறகுக்கடை வைத்துள்ளார். கடந்த 1.2.2015 அன்று விறகுக்கடையில் இருந்தபோது, வேலூர் கொணவட்டம் தாமரை குளத்தெருவைச் சேர்ந்த முகமதுகலீல் (43) என்பவர் அங்கு வந்தார்.

திடீரென அவர், அமுதாவை மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை கழற்றி தருமாறு கூறினார். அதற்கு அவர் மறுக்கவே, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரின் கழுத்தில் வைத்து மிரட்டி நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து அமுதா வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்த வழக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கின் இறுதி விசாரணையை நீதிபதி பாலசுப்பிரமணியன் மேற்கொண்டார். பின்னர் அவர் தீர்ப்பு கூறினார். அதில் முகமதுகலீல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் முகமதுகலீலை வேலூர் மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பி.மோகன் ஆஜராகி வாதாடினார்.

Similar News