செய்திகள்
மஞ்சுவிரட்டு காளைக்கு மேளதாளங்களுடன் இறுதி சடங்கு

குடியாத்தம் அருகே மஞ்சுவிரட்டு காளைக்கு மேளதாளங்களுடன் இறுதி சடங்கு

Published On 2020-12-14 09:26 GMT   |   Update On 2020-12-14 09:26 GMT
குடியாத்தம் அருகே மஞ்சுவிரட்டு காளை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததையடுத்து, காளைக்கு மாலைகள் அணிவித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். டிராவல்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 5 ஆண்டுகளாக காளை மாடு வளர்த்து வந்தார். கள்ளூர் பஜ்ஜி என பெயரிடப்பட்ட அந்த காளையை தங்களது குடும்பத்தில் ஒருவராக குடும்பத்தினர் பாசமாக வளர்த்து வந்தனர். கள்ளூர் பஜ்ஜி காளை உள்ளூர் மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளது. அந்த காளைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக காளை உயிரிழந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காளைக்கு மாலைகள் அணிவித்து இறுதிச்சடங்கு செய்தனர்.

மேலும் மேளதாளங்கள் மற்றும் பட்டாசுகள் வெடித்து கண்ணீர்விட்டு கதறி அழுது பிரியா விடை கொடுத்தனர். காளையை சுற்றி குமார் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. காளை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News