அந்தியூர் அருகே ஆண் குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொன்ற கொடூர தந்தை
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி காலனியை சேர்ந்தவர் மணி. ரிக்வண்டி தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு யுவராணி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வது முறையாக கர்ப்பம் அடைந்த பவித்ராவுக்கு கடந்த மாதம் 3-ந் தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் பவித்ரா தனது குழந்தையுடன் சென்னம்பட்டி காலனிக்கு திரும்பினார். இந்த நிலையில் குழந்தை பிறந்து 19-வது நாளில் அதிகாலை பால்குடித்த போது குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாக மணி மற்றும் பவித்ரா ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையின் உடல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
இதற்கிடையே ஆண் குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஈரோடு மாவட்ட சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இது குறித்து போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி, மற்றும் வெள்ளி திருப்பூர் போலீசார், சைல்டு லைன் அமைப்பினர், மருத்துவ துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
ஆண் குழந்தை சாவில் மர்மம் குறித்து சென்னம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் தமிழ் செல்வி என்பவர் வெள்ளி திருப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் பெருந்துறை மருத்துவ கல்லூரியில் இருந்து டாக்டர்கள் சென்னம்பட்டி காலனிக்கு வந்து குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் பின்பக்க தலையில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. எனவே குழந்தையை கொலை செய்து விட்டு நாடகமாடுவதை போலீசார் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து குழந்தையின் தந்தை மணியை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மணி சென்னம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வியிடம் சரண் அடைந்தார். அவர் அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி முன்னிலையில் ஆஜர்படுத்தினார்.
போலீசாரிடம் குழந்தையை தான் கொலை செய்ததாக மணி தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து அவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்தார். அதில் அவர் தெரிவித்ததாவது:-
எனது மனைவி பவித்ராவுக்கு ஏற்கனவே சதீஷ் என்பவருடன் திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வதாக நான் பவித்ராவை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் 2-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
நான் ரிக் வண்டிக் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று விடுவேன். இந்த நிலையில் ஊரில் உள்ளவர்கள் எனது மனைவி பவித்ராவுக்கும், எனது தம்பி ரஞ்சித்துக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக பேசி கொண்டனர். இதனால் எனக்கு எனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
மேலும் குழந்தையும் என் முக சாயலில் இல்லை. இதனால் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தேன். சம்பவத்தன்று அதிகாலை குழந்தை என் மனைவி அருகே தூங்கி கொண்டு இருந்தது. அப்போது நான் குழந்தையை தூக்கிகொண்டு அருகில் இருந்த ஒரு தொட்டியில் இருந்த தண்ணீரில் குழந்தையை அமுக்கி கொலை செய்தேன்.
பின்னர் மீண்டும் குழந்தையை என் மனைவி அருகே கொண்டு சென்று வைத்து விட்டேன். காலையில் எழுந்த என் மனைவி குழந்தை பால் குடித்த போது மூச்சு திணறி இறந்து இருக்கலாம் என்று கருதி கொண்டார். குழந்தையை கொன்றது குறித்து எனது தம்பி ரஞ்சித்திடம் தெரிவித்தேன். அவன் எதற்கு அவரசப்பட்டு கொலை செய்தாய் என்று கேட்டான். மேலும் நாங்கள் 2 பேரும் இதை யாரிடமும் சொல்லாமல் குழந்தையை குழி தோண்டி புதைத்து விட்டோம்.
ஊரில் உள்ளவர்கள் இதுப்பற்றி தெரிந்து கொண்டு புகார் செய்ததால் நாங்கள் சிக்கி கொண்டோம்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
மேலும் குழந்தை கொலை தொடர்பாக மணிக்கு உதவியாக இருந்த அவரது தம்பி ரஞ்சித்தையும் போலீசார் கைது செய்தனர்.