செய்திகள்
சித்தாமூர் ஒன்றியத்தில் செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் மாவட்ட திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனரும், ஊரக வளர்ச்சித்துறை முகமை அலுவலருமான செல்வகுமார் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அதன் பின்னர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பதிவேடுகளை ஊராட்சிகள் பராமரிப்பது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களுக்கு தெளிவுரைகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சூணாம்பேடு ஊராட்சி, ஈசூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிகளை ஆய்வு செய்தார். இப்பணிகளின் அவசியம் குறித்து திட்ட பணியாளர்களுக்கு விளக்கவுரை ஆற்றினார்.
இந்த ஆய்வின் போது, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, வீரமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.