செய்திகள்
ஊட்டி மரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை படத்தில் காணலாம்.

ஊட்டி மரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

Published On 2020-12-03 04:30 GMT   |   Update On 2020-12-03 04:30 GMT
ஊட்டி மரவியல் பூங்காவில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
ஊட்டி:

நீலகிரியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் குறிஞ்சி செடிகள் பரவலாக காணப்படுகிறது. இந்த செடிகளில் பூத்துக்குலுங்கும் நீல நிற மலர்களால் நீலகிரி என்ற பெயர் வந்தது. குறிஞ்சி செடிகளில் பல வகைகள் உள்ளன. அதில் சில மலர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை, ஆண்டுக்கு ஒருமுறை, 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்லட்டியில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்கின. அப்போது சுற்றுலா பயணிகளை கவருவதற்காக குறிஞ்சி விழா நடத்தப்பட்டது. சமீபத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்கியதை காண முடிந்தது.

இந்த நிலையில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டியில் செயல்பட்டு வரும் மரவியல் பூங்காவில் தற்போது குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

பூங்கா நுழைவுவாயில் பகுதியில் குறிஞ்சி செடிகளில் நீல நிறங்களில் மலர்கள் காணப்படுகிறது. இது ‘ஸட்ரோபிலாந்தஸ் குந்தியான்ஸ்’ என்ற வகையை சேர்ந்தது ஆகும். அவை கோவில் மணிகளின் உருவம் போல காட்சி அளிக்கிறது. பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை தேனீக்கள் மொய்க்க தொடங்கி உள்ளன. குறிஞ்சி மலர்கள் பூக்க தொடங்கினாலும், ஊட்டி மரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது.

எனினும் பூங்காவுக்கு வந்து செல்லும் சில சுற்றுலா பயணிகள் மற்றும் நடைபயிற்சிக்கு வரும் உள்ளூர் மக்கள் குறிஞ்சி மலர்களை புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
Tags:    

Similar News