செய்திகள்
சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார்

வடமதுரை அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார்

Published On 2020-11-29 08:31 GMT   |   Update On 2020-11-29 08:31 GMT
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய காரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நல்லமனார் கோட்டையில் இருந்து மாரம்பாடி செல்லும் சாலையில் ரெயில்வே தண்டவாள அடிப்பகுதியில் சுரங்கப்பாதை உள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு பெய்த மழை காரணமாக, இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்ற ரெயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை கரூரை சேர்ந்த நந்தகோபால் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் அந்த வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது சுரங்கப்பாதையை அவர் கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக கார் தண்ணீருக்குள் சிக்கிக்கொண்டது.

காரின் மேல்பகுதி மட்டுமே வெளியே தெரிந்தது. காரின் கதவில் இருந்த கண்ணாடிகள் மூடியிருந்தன. மேலும் அந்த கார் சொகுசு கார் என்பதால் தண்ணீருக்குள் கார் மூழ்கியதும் கதவுகளில் இருந்த பூட்டு தானாக இயங்கி கதவுகளை பூட்டிக்கொண்டது. இதனால் காரில் இருந்தவர்கள், கதவுகளை திறந்து வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காரின் கதவை திறக்க முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. பின்னர் காரின் பின்பக்கத்தில் கயிறு கட்டி அந்த கயிற்றை டிராக்டருடன் இணைத்தனர். அதையடுத்து டிராக்டர் மூலம் அந்த காரை இழுத்து வெளியே கொண்டு வந்தனர். அதன்பின்னரே காரின் கதவுகளை திறந்து அதில் இருந்தவர்களை பொதுமக்கள் மீட்டனர்.
Tags:    

Similar News