செய்திகள்
லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பி வழிவதை படத்தில் காணலாம்.

பொன்னேரி அருகே நிரம்பி வழியும் லட்சுமிபுரம் அணைக்கட்டு

Published On 2020-11-27 16:14 IST   |   Update On 2020-11-27 16:14:00 IST
பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் அணைக்கட்டுக்கு தொடர்ந்து மழைநீர் வந்து கொண்டிருப்பதால் நிரம்பி வழிகிறது.
பொன்னேரி:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி மலையில் உள்ள கருனேத் நகரில் ஆரணியாறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு ஆந்திராவில் 65 கிலோ மீட்டரும் தமிழகத்தில் சுருட்டப்பள்ளி கிராமத்தின் வழியாக ஆரணி, பொன்னேரி, லட்சுமிபுரம், ரெட்டிபாளையம், தத்தைமஞ்சி வழியாக சென்று ஆண்டார்மடம் கிராமத்தில் இரு கிளைகளாக பிரிந்து பழவேற்காடு ஏரியில் கலக்கிறது. மேலும் ஆரணியாறு தமிழகத்தில் 763 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதில் 174 ஏரிகளை நிரப்பும் திறன் கொண்டதாக விளங்கி 4 அணைக்கட்டுகள் மூலம் மழை நீர் தேக்கி வைக்கப்படும்.

கடந்த ஒரு சில நாட்களாக பெய்து வரும் மழையால் பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டில் நீர் நிரம்பி வழிகிறது. இந்த தண்ணீர் அத்தமனஞ்சேரி ரெட்டிபாளையம் அணைக் கட்டுக்கு சென்று கொண்டிருக்கிறது.

இது குறித்து பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் முருகன் கூறுகையில்:-

லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருபுறமும் உள்ள மதகுகள் சீரமைக்கப்பட்டதால் மழை நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இடதுபுற மதகு வழியாக செல்லும் நீர் மடிமைகண்டிகை, ஆசானபுதூர், மெதூர், வஞ்சிவாக்கம் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் வலது புற மதகு வழியாக செல்லும் நீர் ஆலாடு, தேவதானம், காணியம்பாக்கம், வேளூர், காட்டூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்புகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உதவி பொறியாளர் ஜெயகுரு உடன் இருந்தார்.

Similar News