செய்திகள்
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

நீட்ஸ் திட்டத்தின் கீழ் 28 தொழில் திட்டங்களுக்கு ரூ.85 லட்சம் மானியம் - கலெக்டர் தகவல்

Published On 2020-11-26 13:55 GMT   |   Update On 2020-11-26 13:55 GMT
நீட்ஸ் திட்டத்தின் கீழ் நீலகிரியில் 28 தொழில் திட்டங்களுக்கு ரூ.85 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்), பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பி.எம்.இ.ஜி.பி.) ஆகிய திட்டங்கள் நீலகிரி மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2020-2021-ம் நிதியாண்டில் சுயதொழில் தொடங்க நீலகிரிக்கு நீட்ஸ் திட்டத்தின் கீழ் 28 தொழில் திட்டங்களுக்கு மானியம் ரூ.85 லட்சம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டில் தொழில் முனைவோர் விரைவில் தொழில் தொடங்கும் பொருட்டு மாவட்ட தேர்வுக்குழு மூலம் நடக்கும் நேர்முகத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

நீட்ஸ் திட்டத்தின் கீழ் திட்டங்களுக்கான தொழில் முனைவோர் பெற வேண்டிய பயிற்சியில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை மாநில அரசு விலக்கு அளித்து அரசாணை பிறப்பித்தது. பி.எம்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் பெற வேண்டிய பயிற்சியை இணையவழி மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in/ne-eds என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழக அரசு சார்பில் நிலம், கட்டிடம் மற்றும் எந்திரம் உள்ளடக்கிய திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும்.

மேலும் 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உற்பத்தி பிரிவில் திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக இருந்தாலோ அல்லது சேவை பிரிவில் திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தாலோ 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உற்பத்தி பிரிவில் திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்துக்கு குறைவாக இருந்தாலோ அல்லது சேவை பிரிவில் திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தாலோ கல்வித் தகுதி அவசியம் இல்லை. சிறப்பு பிரிவினரில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் தகுதியானவர்கள்.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூ.25 லட்சம் முதலீட்டிலும், சேவை தொழில்களை அதிகபட்சம் ரூ.10 லட்சம் முதலீட்டிலும் தொடங்க www.kv-i-c-o-n-l-i-ne.gov.in/pm-e-g-p-e-p-o-rt-al என்ற இணையதள முகவரி யில் தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு நகர்ப்புற பொது பிரிவினருக்கு 15 சதவீதம், நகர்ப்புற சிறப்பு பிரிவினருக்கு 25 சதவீதம், கிராமப்புற பொதுப்பிரிவினருக்கு 25 சதவீதம், கிராமப்புற சிறப்புப் பிரிவினருக்கு 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9345619672 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஆகவே தகுதியும், ஆர்வமும் உள்ள தொழில் முனைவோர்கள் இத்திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News