செய்திகள்
கோப்புபடம்

3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கியை கொடுத்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கைது

Published On 2020-11-24 10:02 GMT   |   Update On 2020-11-24 10:02 GMT
3 பேர் சுட்டுக்கொல்லப் பட்ட வழக்கில், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை கொடுத்ததாக ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்: 

சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவன அதிபர் தலில் சந்த்(வயது 74), அவருடைய மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல்குமார்(40) ஆகியோர் கடந்த 11-ந் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், அவருடைய நண்பர்களான விஜய்உத்தம், ரவீந்திரநாத்கர் ஆகிய 3 பேரை ஏற்கனவே தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரர் விலாஸ், கூட்டாளி ராஜீவ்ஷிண்டே ஆகியோர் டெல்லி ஆக்ராவில் கைது செய்யப்பட்டு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் கைதான கைலாஷ், விஜய் உத்தம், ரவீந்திரநாத்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அப்போது கைலாஷ், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை தனது நண்பரான ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்து இருந்தார்.

இதையடுத்து தனிப்படை போலீசார், ஜெய்ப்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ராஜீவ் துப்பேர் (58) என்பவரை சென்னை யானைக்கவுனி போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரித்தனர். தனது மனைவியின் பெயரில் இருந்த காரை, கைலாசுக்கு முறையாக விற்பனை செய்தேன். அந்த காரில் தனது துப்பாக்கி இருந்தது. தானாக துப்பாக்கியை அவரிடம் கொடுக்கவில்லை. அந்த துப்பாக்கிக்கு முறையாக உரிமம் பெற்று உள்ளதாகவும் கூறினார்.

ஆனால் கைலாஷ், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியதால், விமானப்படை அதிகாரி தனது துப்பாக்கியை பாதுகாப்புக்கு தனக்கு கொடுத்ததாகவும், அத்துடன் துப்பாக்கியால் சுடுவதற்கும் தனக்கு பயிற்சி கொடுத்ததாகவும் வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

முன்னுக்குப்பின் முரணான இந்த தகவல்களால் தீவிர விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், முறையான உரிமம் வைத்திருக்கும் துப்பாக்கியை சட்டவிரோதமாக நண்பருக்கு கொடுத்ததாக கூறி ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ராஜீவ் துப்பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News