செய்திகள்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை தீபத்திருவிழா: 27-ந் தேதியிலிருந்து 3 நாட்கள் வெளியூர் நபர்கள் தங்க அனுமதியில்லை

Published On 2020-11-24 03:19 GMT   |   Update On 2020-11-24 03:19 GMT
திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவையொட்டி வருகிற 27-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு வெளியூர் நபர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. சிகர நிகழ்ச்சியாக வருகிற 29-ந் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை நகரத்தில் உள்ள திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலகத்தில் உதவி கலெக்டர் ஸ்ரீதேவி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் திருமண மண்டபம், மடத்தின் உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கொரோனா தொற்று பரவல் இல்லாமல் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவதற்கு ஏதுவாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

29-ந் தேதி நடைபெற உள்ள தீபத் திருநாளையொட்டி 27-ந் தேதியில் இருந்து 3 நாட்களுக்கு எந்தவித நிகழ்ச்சிகளும், வெளியூர் நபர்கள் தங்குவதற்கு அனுமதியும் அளிக்கக் கூடாது. அடுத்து 4 நாட்கள் தங்குவதற்கு பதிவு செய்தவர்கள் குறித்த விவரங்களை போலீசாருக்கும், வருவாய் துறைக்கும் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை சுபமுகூர்த்தம் இருப்பதால் அன்று மாலை வரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்க அனுமதிக்க வேண்டும் என்று திருமண மண்டப உரிமையாளர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து திருமண மண்டபம், மடம் மற்றும் தங்கும் விடுதியில் வருகிற 27-ந் தேதியன்று காலை வரை நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ளவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அன்று இரவு 12 மணி வரை தங்கிக் கொள்ள அனுமதித்தும், இரவு 12 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் அனைவரும் மடம், திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 28-ந் தேதி மற்றும் 29-ந் தேதி ஆகிய 2 நாட்கள் எவ்வித நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும், அன்னதானத்திற்காக உணவு சமைக்கவும், வழங்கவும், உணவு பொருட்கள் வெளியிலிருந்து பெற தடை விதித்தும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News