செய்திகள்
பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் முருகன் வேலை உயர்த்தி காட்டிய போது எடுத்த படம்.

ஈரோட்டில் தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கிய பா.ஜனதா தலைவர் உள்பட 1,330 பேர் கைது

Published On 2020-11-21 06:25 GMT   |   Update On 2020-11-21 06:25 GMT
ஈரோட்டில் தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கிய பா.ஜனதா தலைவர் உள்பட 1,330 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி சமூக ஊடகத்தில் வெளியிட்டவர்களை கண்டித்து தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சியினர் வேல் பூஜை அறிவித்தனர். அதைத்தொடர்ந்து முருக பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் வேல் யாத்திரை நடைபெறும் என்று பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்தார். இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி கடந்த 6-ந் தேதி திருத்தணியில் வேல் யாத்திரையை மாநில தலைவர் எல்.முருகன் தொடங்கினார். தடையை மீறியதால் அவர் கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களிலும் வேல் யாத்திரை தொடங்குவதும், கைது செய்வதும் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சேலத்தில் வேல் யாத்திரை நிகழ்ச்சியை தொடர்ந்து நேற்று ஈரோட்டில் வேல் யாத்திரை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஈரோடு வந்த மாநில பா.ஜனதா தலைவர் முருகன் நேற்று காலை சென்னிமலை முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் ஈரோடு வந்த அவர் சத்தி ரோடு முத்துசாமி வீதி பகுதியில் ‘தேசியம் காக்க தமிழகம் காக்க’ என்ற கையடக்க பதிப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் அங்கிருந்து வேல் யாத்திரை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இடத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். திறந்த காரில் காவி உடை உடுத்தி, கையில் வேல் ஏந்தி மாநில தலைவர் எல்.முருகன் சம்பத்நகர் வந்தார். அவருக்கு ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் வேல் யாத்திரையை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

சூரசம்ஹாரம் நிகழ்ந்த இந்த நாளில், கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட சென்னிமலையை உள்ளடக்கிய ஈரோட்டில் வேல் யாத்திரையை தொடங்குகிறோம். முருகன் நம் வாழ்வின் ஒளி. நமது முருகக்கடவுளை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் விடமாட்டோம். அறுபடை வீடுகளுக்கும் வீரபாகுவின் படையுடன் வேல் யாத்திரை செல்கிறோம். படை வீடுகள் மட்டுமின்றி, சென்னிமலை, மருதமலை, ரத்னகிரி உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களுக்கும் செல்கிறோம். கந்தசஷ்டியை முன்னிட்டு முருக பக்தர்களாகிய நாம் விரதம் இருந்து வருகிறோம். தமிழ்க்கடவுள் முருகனை போற்றுவது மட்டும் இல்லை. கந்தசஷ்டி கவசத்தையும், முருகபெருமானையும் கொச்சைப்படுத்திய கருப்பர் கூட்டம் என்ற கயவர் கூட்டத்துக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

கொரோனா காலத்தில் பா.ஜனதா தொண்டர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து 1 கோடி பேருக்கு உணவு அளித்தார்கள். 50 லட்சம் பேருக்கு மோடி கிட் கொடுத்தார்கள். பெண்கள் முகக்கவசங்கள் தைத்து கொடுத்தார்கள். எனவே கொரோனா காலத்தில் தன்னலம் கருதாமல் உழைத்த பா.ஜனதா தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் யாத்திரையாக இந்த வேல் யாத்திரை உள்ளது. வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்தில் அமரச்செய்யும் வரை ஓய்வு இல்லை.

இவ்வாறு பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பேசினார்.

முன்னதாக பா.ஜனதா மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேசும்போது, ‘சென்னிமலை முருகன் கோவிலில் தமிழக அரசியல் சீரழிவில் இருந்து மாற்றம் வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து இந்த வேல் யாத்திரையை தொடங்கி இருக்கிறோம். இந்த யாத்திரை இன்று தொடங்குகிறது. ஆனால், உண்மையான முடிவு என்பது 2021-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலில் தான். இன்று உங்களுக்கு இருக்கும் எழுச்சி, உத்வேகத்துடன் தாமரை சின்னத்தில் வாக்களித்து வேல் யாத்திரையை முடிக்க வேண்டும்’ என்றார்.

நிகழ்ச்சியில் மாநில தலைவர் எல்.முருகனுக்கு ஆளுயர மாலை மற்றும் மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு பரிசாக வேல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வேல் யாத்திரை தொடங்க மாநில தலைவர் எல்.முருகன் வேல்களுடன் புறப்பட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்தனர். அவர்கள் தொடர்ந்து செல்வதாக தெரிவித்ததால், அனைவரையும் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மாநில தலைவர் எல்.முருகனை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினார்கள்.

இதையடுத்து 425 பெண்கள் உள்பட 1,330 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பெருந்துறை ரோட்டில் உள்ள பரிமளம் மகாலில் தங்க வைக்கப்பட்டனர்.

யாத்திரையை முன்னிட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்.கார்த்திக்குமார், கனகேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ, சண்முகம், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், பன்னீர்செல்வன், நாகலட்சுமி உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சம்பத் நகர் பகுதிக்கு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. நிகழ்வையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் முக்கிய இடங்களில் பா.ஜனதா கொடி கட்டப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் நடத்தப்படும் இந்த வேல் யாத்திரை டிசம்பர் 7-ந் தேதி திருச்செந்தூரில் நிறைவடைகிறது.
Tags:    

Similar News