செய்திகள்
கூடலூர்-கேரள எல்லையான நாடுகாணியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தபோது எடுத்தபடம்.

சர்வரில் திடீர் கோளாறு: இ-பாஸ் பெற முடியாமல் பயணிகள் தவிப்பு

Published On 2020-11-20 14:42 GMT   |   Update On 2020-11-20 14:42 GMT
சர்வரில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இ-பாஸ் பெற முடியாமல் பயணிகள் தவித்தனர். அவர்கள் விடிய விடிய எல்லையில் காத்திருந்தனர்.
கூடலூர்:

தமிழகத்தில் ஊரடங்கில் இருந்து பல தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் மலைபிரதேசமான நீலகிரிக்கு வர இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கு வர இ-பாஸ் பெற நடைமுறை தளர்த்தப்பட்டு உள்ளதால், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக இ-பாஸ் பெறப்பட்டு வருகிறது.

தற்போது இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், மாவட்ட எல்லையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை உள்ளே அனுமதிப்பது இல்லை.

இந்த நிலையில் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கார்களில் வந்த சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு இ-பாஸ் பெற விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து விண்ணப்பித்தபோதும் எந்த பலனும் இல்லை. இதனால் அவர்கள் கூடலூர்-கேரள எல்லையான நாடுகாணி சோதனை சாவடி வழியாக நீலகிரிக்குள் வர முயன்றனர்.

அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் இ-பாஸ் பெறவில்லை என்பதால் உள்ளே அனுமதிக்க வில்லை. உடனே அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அப்போதுதான் இரவு 12 மணி முதல் சர்வரில் திடீர் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.

இருந்தபோதிலும் இ-பாஸ் பெறாத பயணிகள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் மாநில எல்லையில் சுற்றுலா பயணிகள் தங்கள் காருக்குள்ளேயே விடிய விடிய காத்திருந்தனர். பின்னர் காலை 8 மணிக்கு சர்வர் சரியானது. அதன் பிறகு அனைவருக்கும் இ-பாஸ் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அதை காண்பித்துவிட்டு நீலகிரிக்குள் வந்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, சுற்றுலா பயணிகள் இ-பாஸ் கிடைத்ததும் வர வேண்டும். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுவிட்டு நீலகிரி அருகே வரும்போது இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கிறார்கள். சர்வரில் திடீர் கோளாறு ஏற்படும்போது அனுமதி கிடைக்காததால் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. எனவே இதை தவிர்க்க வேண்டும். தற்போது சர்வரில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டது என்றனர்.
Tags:    

Similar News