செய்திகள்
ஊட்டியில் உள்ள ரேஷன் கடையில் பெரிய வெங்காயம் விற்பனை செய்தபோது எடுத்த படம்.

குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம் விற்பனை

Published On 2020-11-17 18:25 GMT   |   Update On 2020-11-17 18:25 GMT
குறைந்த விலையில் ஊட்டியில் 20 கூட்டுறவு ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்துக்கு தமிழகத்தின் சமவெளி பகுதிகள் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தற்போது வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை, சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உழவர் சந்தையில் பெரிய வெங்காயம் ரூ.75-க்கும், சின்ன வெங்காயம் ரூ.110-க்கும் அதன் தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. 3 வாரங்களை கடந்தும் சின்ன வெங்காயத்தின் விலை குறையாமல் அதே விலையே நீடிக்கிறது. பெரிய வெங்காயம் வரத்து சற்று அதிகரித்து இருப்பதால், அதன் விலை ஓரளவு குறைந்து உள்ளது.

தமிழகத்தில் வெங்காயம் பதுக்குவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட்டுறவுத்துறை கீழ் இயங்கும் கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை ஆகிறது.

ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடைகளுக்கு சென்று பெரிய வெங்காயம் வாங்கலாம். ஒரு கிலோ மற்றும் அதற்கு மேல் வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் போதே பெரிய வெங்காயத்தையும் வாங்கி செல்கிறார்கள்.

இதுகுறித்து கூட்டுறவு துணை பதிவாளர் கணபதி சுப்பிரமணியம் கூறும்போது, 5 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 20 கூட்டுறவு ரேஷன் கடைகளில் சோதனை அடிப்படையில் குறைந்த விலையில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வாங்கும் அளவை பொறுத்து கூடுதலாக பெரிய வெங்காயம் வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Tags:    

Similar News