செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா

Published On 2020-11-17 18:17 GMT   |   Update On 2020-11-17 18:17 GMT
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு:

கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் தினமும் பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாலை வெளியான பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 662 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் 108 பேர் குணமடைந்தார்கள். மொத்தம் 10 ஆயிரத்து 946 பேர் கொரோனாவில் முழுமையாக மீண்டு உள்ளனர். 580 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 136 பேர் பலியாகி உள்ளனர்.

தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைவிட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுபவர்கள் குறைந்து கொண்டு வருகிறார்கள். மேலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்து கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவுகிறது.

இதற்கிடையே கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருவதால் கொரோனா சிறப்பு மையங்களை மூடுவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-

கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால் மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தீபாவளி பண்டிகை கூட்டம், வெளியூர் சென்று வந்தவர்கள் போன்ற காரணங்களால் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா என்று ஒரு வாரத்துக்குள் தெரியவரும். அதன்பிறகு பாதிப்பு எண்ணிக்கை உயரவில்லை என்றால் சிறப்பு சிகிச்சை மையங்கள் மூடப்படும். அதற்கு பதிலாக அந்தந்த பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களை சிகிச்சை மையங்களாக பயன்படுத்த ஆலோசனை நடத்தப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
Tags:    

Similar News