செய்திகள்
கைது

சிதம்பரத்தில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது

Published On 2020-11-17 12:57 GMT   |   Update On 2020-11-17 12:57 GMT
சிதம்பரத்தில் போலி டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள சில மருந்துக்கடைகளில், சிலர் கிளீனிக் அமைத்து, எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக்கிற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சிதம்பரம் நகர பகுதிகளில் உள்ள மருந்துக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது வடக்கு வடுக தெருவில் உள்ள ஒரு மருந்துக்கடையின் உள்பகுதியில் கிளீனிக் அமைத்து, பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சிதம்பரம் விபீஷ்ணபுரத்தை சேர்ந்த திருஞானம்(வயது 63) என்பதும், 10-ம் வகுப்பு படித்து விட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து எம்.பி.பி.எஸ். படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த திருஞானத்தை போலீசார் கைது செய்ததோடு, கிளீனிக்கில் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் 10-ம் வகுப்பு படித்து விட்டு சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள ஒரு மருந்துக்கடையில் கிளீனிக் அமைத்து, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் சங்கர்(44) என்பவரையும், சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர். மேலும் கிளீனிக்கில் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிதம்பரத்தில் எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News