செய்திகள்
விருத்தாசலம் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
விருத்தாசலம் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான போலீசார் திட்டக்குடி அருகே உள்ள கொரக்கவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த ஆத்தூரை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் ஆனந்தராஜ் என்கிற ஜீவாவை (வயது 24) போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் லட்சுமணபுரத்தில் உள்ள வெள்ளாற்றின் கரையில் வைத்து சாராயம் விற்ற, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த காரியனூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி பவுனாம்பாள்(59) என்பவரையும் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.