செய்திகள்
ராயக்கோட்டை அருகே யு.புரம் கிராமத்தில் யானை செத்து கிடந்ததை காணலாம்

ராயக்கோட்டை அருகே மர்மமாக செத்து கிடந்த யானை

Published On 2020-11-16 09:01 IST   |   Update On 2020-11-16 09:01:00 IST
ராயக்கோட்டை அருகே ஆண் யானை மர்மமான முறையில் செத்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உள்பட மொத்தம் 3 யானைகள் உணவுக்காக சுற்றித்திரிந்தன. அவை ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன.

இதில் 35 வயதுடைய ஆண் யானை உணவுக்காக வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் வெளியேறியது. அந்த யானை அருகில் உள்ள யு.புரம் கிராமத்தில் விளை நிலங்களுக்குள் சென்று பயிர்களை தின்றது. நேற்று அதிகாலை அந்த யானை மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பி சென்றது.

இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் விளை நிலத்தில் ஆண் யானை செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், இதுகுறித்து ராயக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள்.

யானைக்கு காது பகுதியில் காயம் ஒன்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். இந்த பிரேத பரிசோதனையின் முடிவிலேயே யானை எப்படி இறந்தது என தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். யானையை யாரேனும் துப்பாக்கியால் சுட்டார்களா?, அல்லது விஷ காய்களை தின்று இறந்ததா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 3-ந்தேதி ஜவளகிரி வனச்சரகத்தில் பெண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. விசாரணையில் அது துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக இந்த மாதத்தில் 2-வதாக யானை இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News