செய்திகள்
கைது

பட்டாசு வெடித்த தகராறில் போலீஸ் மண்டை உடைப்பு- பா.ம.க. செயலாளர் கைது

Published On 2020-11-15 12:54 IST   |   Update On 2020-11-15 12:54:00 IST
செந்துறை அருகே பட்டாசு வெடித்த தகராறில் போலீசார் மண்டை உடைந்தது. இந்த சம்பவத்தில் பா.ம.க. செயலாளர் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உலக சாமிதுரை. இவர் பா.ம.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அரியலூர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு பா.ம.க.வினர் சாமிதுரை வீடு அருகே ஒரு பகுதியிலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சாமிநாதன் வீட்டிற்கு முன்பும் வெடி வெடித்து கொண்டு இருந்தனர். அப்பகுதியில் ரோந்து சென்ற செந்துறை போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜ்குமார் பா.ம.க. தரப்பினரை கலைந்து போகுமாறு கூறினார்.

அதனைத் தொடர்ந்து பா.ம.க.வினர் இலைக் கடம்பூரில் இருந்து செந்துறை நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அப்போது சாமிநாதன் வீட்டிற்கு முன்பு அவர்கள் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டித்தனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அவர்கள் உருட்டு கட்டைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது அதனை தடுக்க முயன்ற தனிப்பிரிவு காவலர் துரைமுருகன் மண்டை உடைந்தது. அவரை போலீசார் உடனடியாக செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணைப் போலீஸ் சூப்பிரண்டு மதன் உள்ளிட்ட போலீசார் திடீரென பெரம்பலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் உலக சாமிதுரை, நமங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் காட்டுராஜா, பா.ம.க. ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் பா.ம.க.வினர் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து செந்துறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் உடனடியாக பா.ம.க. மாவட்ட செயலாளரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு பதட்டம் ஏற்பட்டதால் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பா.ம.க. மாவட்ட செயலாளர் உலக சாமிதுரை நேரடி மோதலில் ஈடுபட வில்லை என்று தெரியவந்தது. பின்னர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கைது செய்யப்பட்ட உலக சாமிதுரை உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். மேலும் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

இதற்கிடையே பா.ம.க. மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 2 தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பா.ம.க. மாவட்ட செயலாளர் திடீர் கைது காரணமாக செந்துறை பகுதியில் நள்ளிரவில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

Similar News