செய்திகள்
கோப்புபடம்

கீழ்வேளூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

Published On 2020-11-13 17:28 IST   |   Update On 2020-11-13 17:28:00 IST
கீழ்வேளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிக்கல்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்.இவருடைய மனைவி அனுசியா தேவி (வயது.36). செல்வராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அனுசியா தேவி குழந்தைகளுடன் அகரகடம்பனூர் அக்ரஹார தெருவில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குழந்தைகளுடன் ஒரு அறையில் அனுசியா தேவி படுத்து தூங்கி உள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

மேலும் அனுசியா தேவி வீட்டின் அருகில் உள்ள கணேசன் மகன் குபேரன் என்பவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல மர்ம நபர்கள் முயன்றுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதேபோல கீழ்வேளூர் மெயின்ரோட்டில் தாசில்தார் அலுவலகம் பகுதியில் உள்ள ஒரு டைல்ஸ் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.அப்போது மக்கள் நடமாட்டம் இருந்ததால் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News