செய்திகள்
கைது

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.51 லட்சம் மோசடி- தனியார் பள்ளி ஊழியர் கைது

Published On 2020-11-13 06:39 GMT   |   Update On 2020-11-13 06:39 GMT
கடலூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.51 லட்சம் மோசடி செய்த தனியார் பள்ளி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:

கடலூர் முதுநகர் சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் அன்பு மனைவி தமிழரசி (வயது 50). இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், கடலூர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஊழியர் விஜயராகவன் (40) என்பவர், தனது அக்காள் சங்கரி என்பவருடன் சேர்ந்து 400, 700, 1000 ரூபாய் என 3 வகையான தீபாவளி பண்டு சீட்டுகள் 12 மாத தவணையில் பிடித்து வருவதாகவும், அதில் பணம் கட்டினால் சீட்டுக்கு தகுந்தாற்போல் 2 மற்றும் 4 கிராம் தங்க நாணயம், 19 வகையான மளிகை பொருட்கள் தருவதாக ஆசைவார்த்தை கூறினார்.

இதை நம்பிய நானும், கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 384 பேர் ரூ.34 லட்சத்து 24 ஆயிரத்து 600-ஐ விஜயராகவனிடம் கொடுத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட அவர், தற்போது நகையை கொடுக்கவில்லை. மேலும் நாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.

இதேபோல் கடலூர் வன்னியர் பாளையத்தை சேர்ந்த கோமதி என்பவர் அதே பகுதியை சேர்ந்த 94 பேரிடம் ரூ.17 லட்சம் பெற்று தீபாவளி பண்டு சீட்டுக்காக விஜயராகவனிடம் கொடுத்துள்ளார். அவர்களையும் விஜயராகவன் ஏமாற்றி விட்டார். நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால், அவர் தனது அக்காள் சங்கரியுடன் சேர்ந்து கொண்டு எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், அதன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் துர்கா, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் லிடியா செல்வி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விஜயராகவன் தனது அக்காள் சங்கரியுடன் சேர்ந்து தீபாவளி பண்டு சீட்டு நடத்தி தமிழரசி, கோமதி உள்ளிட்டோரிடம் ரூ.51 லட்சத்து 24 ஆயிரம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயராகவனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள் மற்றும் ரூ.35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News