செய்திகள்
நெல்லிக்குப்பத்தில் திருட்டு நடைபெற்ற கடையில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

நெல்லிக்குப்பத்தில் அடுத்தடுத்து 3 கடைகளில் பணம் திருட்டு

Published On 2020-11-12 12:06 GMT   |   Update On 2020-11-12 12:06 GMT
நெல்லிக்குப்பத்தில் அடுத்தடுத்து 3 கடைகளில் மர்ம மனிதர்கள் பணத்தை திருடி சென்றுவிட்டனர். இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்:

நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவர் கடை தெருவில் பால்கடை வைத்துள்ளார். நேற்று அதிகாலை வழக்கம் போல் கடையை திறக்க சென்றார். அப்போது வெளிப்புறத்தில் பூட்டு உடைந்து கடை திறந்த நிலையில் கிடந்தது. அதேபோல் அருகில் இருந்த ஜவுளிக்கடையின் பூட்டு மற்றும் கண்ணாடியும், பிரியாணி கடை, மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பேக்கரி ஆகிய கடைகளின் கதவு பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் இதுபற்றி அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரசன்னா, தவச்செல்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த அர்ஜூன், சிறிது தூரம் ஓடி சென்று நின்றது.

இந்த சம்பவத்தில் ஜவுளிக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி போலீசார் பார்த்த போது, கடைக்குள் வந்த ஒருவர் பணம் மற்றும் ஒரு சேலையை திருடிக்கொண்டு செல்வது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஜவுளிக்கடையில் ரூ.18 ஆயிரம் மற்றும் ஒரு சேலை, பேக்கரியில் ரூ.7 ஆயிரம், பால் கடையில் ரூ.5 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடந்து இருப்பது வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Tags:    

Similar News