செய்திகள்
கோப்புபடம்

26-ந்தேதி நாகை மாவட்டத்தில் 50 இடங்களில் சாலைமறியல் - நாகை எம்.பி. செல்வராஜ்

Published On 2020-11-12 14:22 IST   |   Update On 2020-11-12 14:22:00 IST
மத்திய அரசை கண்டித்து வருகிற 26-ந்தேதி நாகை மாவட்டத்தில் 50 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடக்கிறது என்று நாகை எம்.பி. செல்வராஜ் கூறினார்.
நாகப்பட்டினம்:

நாகையில் செல்வராஜ் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை கொண்டு வந்துள்ளது. இதனால் விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். மின்சார திருத்த மசோதா என்ற பெயரில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் மின்சாரத்தை பயன்படுத்தும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி தொழிலாளர்களையும் மத்திய அரசு வஞ்சித்துள்ளது. எனவே மத்திய அரசை கண்டித்து வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகிறது.

அதன்படி நாகை மாவட்டத்தில் 50 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். கொரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து, ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. தொற்று குறைந்து வருவதால் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் தென்னக ரெயில்வே தொடர்ந்து டெல்டா மாவட்ட பகுதிகளை வஞ்சித்து வருகிறது. இதுவரை சென்னையில் இருந்து திருவாரூர் வழியாக காரைக்குடி வரை செல்லும் ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. சென்னையில் இருந்து நாகை, திருச்சியில் இருந்து காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு ரெயில் சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்.

தென்னக ரெயில்வே நாகை மாவட்டத்தை முற்றிலுமாக புறக்கணித்து விட்டது. இந்த போக்கை தென்னக ரெயில்வே மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் தமிமுன்அன்சாரி, மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Similar News