செய்திகள்
கடலூர் உழவர் சந்தையில் விவசாயிகள் விற்பனைக்காக பழங்கள் வைத்திருந்ததை படத்தில் காணலாம்.

7 மாதங்களுக்கு பிறகு கடலூர் உழவர் சந்தை திறப்பு

Published On 2020-11-12 13:56 IST   |   Update On 2020-11-12 13:56:00 IST
7 மாதங்களுக்கு பிறகு கடலூர் உழவர் சந்தை நேற்று திறக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர்:

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் நேர கட்டுப்பாட்டு மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டது.

மேலும் கடலூரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் மக்கள், ஒரே இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் கடலூர் உழவர் சந்தை, திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், கடலூர் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் ஆகிய மார்க்கெட்டுகள் மூடப்பட்டது.

அதற்கு பதிலாக மஞ்சக்குப்பம் மைதானம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் எதிரில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டது. இதேபோல் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட், அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் செயல்பட்டது. இந்நிலையில் ஊரடங்களில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்ததில், அண்ணா மார்க்கெட் தவிர மற்ற மார்க்கெட்டுகள் அனைத்தும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டது. ஆனால் உழவர் சந்தை மட்டும் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோ-ஆப்டெக்ஸ் எதிரில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் விவசாயிகள் நலன் கருதி உழவர் சந்தையை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இது பற்றி ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.அதன் அடிப்படையில் 11-ந் தேதி (அதாவது நேற்று) முதல் உழவர் சந்தை திறக்கப்படும் என்று அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 

இதையடுத்து உழவர் சந்தை முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு நேற்று காலை கடலூர் உழவர் சந்தை திறக்கப்பட்டது. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகள், பயிர்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை உழவர் சந்தையில் வைத்து வியாபாரம் செய்ய தொடங்கினர். ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு உழவர் சந்தை திறக்கப்பட்டும், பொதுமக்கள் யாரும் அங்கு காய்கறிகள், பழங்கள் வாங்க வரவில்லை. ஒருசிலர் மட்டுமே வந்து சென்றனர். இதனால் உழவர் சந்தை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. காய்கறிகள், பழங்கள் அனைத்தும் விற்பனை ஆகாததால், விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்தனர்.

Similar News