செய்திகள்
கடலூர் அருங்காட்சியகம் நேற்று திறந்திருந்தபோது எடுத்த படம்.

கடலூரில் அரசு அருங்காட்சியகம் திறப்பு

Published On 2020-11-11 23:45 IST   |   Update On 2020-11-11 23:45:00 IST
கடலூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் நேற்று திறக்கப்பட்டது.
கடலூர்:

கடலூர் பழைய கலெக்டர் அலுவலகத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால நாணயங்கள், பழமை வாய்ந்த சாமி சிலைகள், கல்வெட்டுகள், இசைக்கருவிகள் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதனை பார்வையிட குழந்தைகளுக்கு ரூ.3, பெரியவர்களுக்கு ரூ.5, வெளி நாட்டை சேர்ந்தவர்கள் பார்வையிட ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் இலவசமாக பார்வையிடலாம். தினந்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட அனுமதி உண்டு. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது.

தற்போது அரசு புதிய தளர்வுகளை அறிவித்ததில், அருங்காட்சியகம் செயல்பட அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று முதல் கடலூர் அரசு அருங்காட்சியகம் செயல்பட தொடங்கியது. ஆனால் முதல் நாள் என்பதால் பார்வையாளர்கள் வரவில்லை. முன்னதாக அருங்காட்சியக ஊழியர்கள், அங்குள்ள சிலைகள், பழங்கால பொருட்களை பாதுகாப்புடன் அடுக்கி வைத்திருந்தனர். பார்வையாளர்கள் வசதிக்காக சானிடைசர், வெப்ப நிலையை அறியும் வகையில் தெர்மல் ஸ்கேனரும் தயார் நிலையில் வைத்திருந்ததை காண முடிந்தது.

Similar News