செய்திகள்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.

சேலத்தில் ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன போராட்டம்

Published On 2020-11-08 16:02 IST   |   Update On 2020-11-08 16:02:00 IST
உணவுப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி சேலத்தில் ஒப்பாரி வைத்து பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தின் மூலம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் சேலத்தில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் ராஜாத்தி தலைமை தாங்கினார்.

தொடர்ந்து தீபாவளி பண்டிகையையொட்டி எண்ணெய், சர்க்கரை, மாவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதை கண்டித்து தீபாவளி பண்டிகை பஜார் என்னும் தலைப்பில் ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

மேலும், பெரிய மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், ரேஷன் கடையில் விலையில்லாமல் தரமான பொருட்களை பொதுமக்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தமிழக அரசு பண்டிகை கால உணவு பொருட்களை கூட்டுறவு ரேஷன் கடைகளில் விலை இல்லாமல் வழங்க வேண்டும். விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.

இதில் சங்கத்தின் மாநில செயலாளர் ராதிகா, மாவட்ட செயலாளர் ஞானசவுந்தரி, மாவட்ட துணை தலைவர் வைரமணி, வடக்கு மாநகர குழு செயலாளர் காவேரி, மேட்டூர் தாலுகா செயலாளர் தேவி, நங்கவள்ளி தாலுகா செயலாளர் கவிதா உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News