விருத்தாசலத்தில் சிறை கைதி உயிரிழந்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கைதி மர்ம மரணம்- விருத்தாசலம் சிறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை
பதிவு: நவம்பர் 08, 2020 12:44
மர்மமான முறையில் இறந்த செல்வமுருகன்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம் புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). முந்திரி வியாபாரி. இவர் நெய்வேலி வடக்குத்து கிராமத்தில் உள்ள வீட்டில் மனைவி பிரேமா (34) மற்று 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று திருட்டு வழக்கு தொடர்பாக செல்வமுருகனை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் விருத்தாசலம் கிளைசிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த செல்வமுருகனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி அவரை போலீசார் கடந்த 4-ந் தேதி விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செல்வமுருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் செல்வமுருகனின் மனைவி பிரேமா அதிர்ச்சியடைந்தார். தனது கணவரின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், போலீசார் அடித்து கொன்று விட்டதாக கூறினார்.
இதையடுத்து செல்வமுருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் செல்வமுருகனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். ஆனால் அவரது உடலை வாங்க செல்வமுருகனின் மனைவி மற்றும் உறவினர்கள் மறுத்து விட்டனர்.
செல்வமுருகனின் இறப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து செல்வமுருகனின் சாவில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார். அதன்பேரில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தீபா வழக்குபதிவு செய்து முதல்கட்ட விசாரணையை தொடங்கினார்.
மேலும் நீதிபதி ஆனந்த் விருத்தாசலம் கிளை சிறைக்கு சென்று செல்வமுருகனுடன் இருந்த கைதிகள் மற்றும் சிறை காவலர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்.