செய்திகள்
சாக்லேட்டில் பீடித்துண்டு

குழந்தைக்கு வாங்கி கொடுத்த சாக்லேட்டில் பீடித்துண்டு

Published On 2020-11-08 08:02 IST   |   Update On 2020-11-08 08:02:00 IST
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் குழந்தைக்கு வாங்கி கொடுத்த சாக்லேட்டில் பீடித்துண்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 35). தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று முன்தினம் இரவில் தனது நண்பருடன் திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு வந்த உறவினரின் குழந்தையிடம் கமலக்கண்ணன் பேச்சு கொடுத்தார். அப்போது அந்த குழந்தைக்கு பிடித்த 10 ரூபாய் சாக்லெட்டை அங்குள்ள கடையில் கமலக்கண்ணன் வாங்கி கொடுத்தார். அந்த சாக்லெட்டின் கவரை பிரித்து, குழந்தையிடம் கொடுக்க முயன்றபோது, அதில் பாதி புகைத்த பீடித்துண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அந்த கடைக்காரரிடம் முறையிட்டபோது, அவர் வேறு சாக்லெட் தருவதாக கூறினார். இதுதொடர்பாக கமலக்கண்ணன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனே உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, சாக்லேட்டில் கிடந்த பீடித்துண்டை பார்வையிட்டனர்.

பின்னர் அந்த கடையில் இருந்த அனைத்து சாக்லேட்டுகளையும் பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கடைக்காரருக்கு நோட்டீசு வழங்கினர். ஆய்வு முடிவு வந்த பின்னர் கடைக்காரர் மற்றும் சாக்லெட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News