செய்திகள்
கோத்தகிரி டேன் டீ அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

20 சதவீத போனஸ் வழங்கக்கோரி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Published On 2020-11-07 12:32 IST   |   Update On 2020-11-07 12:32:00 IST
20 சதவீத போனஸ் வழங்கக்கோரி அரசு தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மாவட்டம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூர் பாண்டியாறு, நெல்லியாளம், சேரங்கோடு, சேரம்பாடி, கொளப்பள்ளி மற்றும் நடுவட்டம், குன்னூர், கோத்தகிரி பகுதியில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் என 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எல்.பி.எப்., உள்பட பல தொழிற்சங்கங்கள் இணைந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் நேற்று முன்தினம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பணிக்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடலூர் பாண்டியாறு, நெல்லியாளம், சேரங்கோடு உள்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தினர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர். மேலும் நெல்லியாளத்தில் தோட்டத்தொழிலாளர்கள் பேரணியாக சென்றனர். இதற்கு பெரியசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமு, அருள்குமார், சந்திரசேகர், சதாசிவம், டேவிட் உள்பட நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

கோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டி பகுதியில் உள்ள டேன் டீ கோட்ட அலுவலகம் முன்பு சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. தலைவர் கரு வெற்றிவேல் தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் சங்கத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோட்ட மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம் என்றனர்.

Similar News