செய்திகள்
கைதானவர்களை படத்தில் காணலாம்.

குன்னூரில் கஞ்சா விற்ற 8 பேர் கைது

Published On 2020-11-05 09:51 IST   |   Update On 2020-11-05 09:51:00 IST
குன்னூரில் கஞ்சா விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இளைஞர்கள் இடையே கஞ்சா பழக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் அங்கு குற்ற சம்பவங்கள் நடக்கும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ரகசிய விசாரணை செய்ததில் கோவையில் இருந்து சிறிய பொட்டலங்களில் கஞ்சாவை அடைத்து அனுப்பி வைப்பது தெரியவந்தது.

எனவே கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்க குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் பல இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று குன்னூர் எடப்பள்ளி அருகே பெட்டட்டி சாலையோரத்தில் உள்ள வனப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து வெலிங்டன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக 8 பேர் நின்றிருந்தனர்.

உடனே போலீசார் அவர்கள் 8 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கேட்டில் பவுண்ட் பகுதியை சேர்ந்த ஜெரால்ட் (வயது 32), ஜெப்ரின் (21), சேலக்கரையை சேர்ந்த ரகு (30), கரடிபள்ளம் பகுதியை சேர்ந்த பிரதீப் (20), பழத்தோட்டத்தை சேர்ந்த சிவா (49), கோவை ரத்தினபுரியை சேர்ந்த சிவகுமார் (28), கவுதம் (26), லட்சுமிபுரத்தை சேர்ந்த சந்தோஷ் (25) என்பது தெரியவந்தது.

மேலும் கோவையை சேர்ந்த சிவக்குமார் உள்பட 3 பேர் கஞ்சாவை குன்னூரை சேர்ந்த நபர்களிடம் கொடுத்து அதை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 8 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News