செய்திகள்
தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிக்கப்பட்டுள்ளதை காணலாம்

தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பு- விவசாயிகள் கவலை

Published On 2020-11-04 10:31 IST   |   Update On 2020-11-04 10:31:00 IST
கோத்தகிரியில் நிலவும் மாறுபட்ட சீதோஷ்ண நிலையால், தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி:

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மழையுடன் கூடிய பனிமூட்டமான காலநிலை நிலவுவதால் தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது. இளம் தண்டு மற்றும் தேயிலை கொழுந்துகளை இந்த நோய் தாக்குவதால் சுமார் 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில், தற்போது பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ.30 வரை நல்லவிலை கிடைக்கும் சமயத்தில், தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறுகையில், தேயிலைத் தோட்டங்களில் அதிக நிழல் தரும் மரங்கள் மற்றும் அதன் கிளைகளை அகற்றி, தேயிலை செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும்.

செடிகளில் கொப்புள நோய் பாதிப்பது தெரியவந்தால், பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்துகளை கவாத்து மூலம் அகற்றிவிட்டு, எக்ஸோ கன்சோல் 200 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் ஆகியவற்றின் கலவையை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு தெளிக்க வேண்டும்.

இதேபோல பிராப்பிகானாசோல் 125 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் கலவையை தெளிப்பான் மூலம் தெளிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்றனர்.

Similar News