செய்திகள்
புதர்மண்டி கிடக்கும் வாய்க்காலை காணலாம்

முக்கூர்-குற்றிமுற்றி இடையே புதர்மண்டி கிடக்கும் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Published On 2020-11-03 15:48 IST   |   Update On 2020-11-03 15:48:00 IST
முக்கூர் - குற்றிமுற்றி இடையே பாசன வாய்க்கால் புதர்மண்டி கிடக்கிறது. அது தூர்வாரப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்:

கூடலூர் பகுதியில் மலை மற்றும் சமவெளி பிரதேசம் பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. நெல், நேந்திரன் வாழை, பீன்ஸ், அவரைக்காய், சேனைக்கிழங்கு, பாகற்காய், புடலங்காய் என காய்கறிகள் ஆண்டு முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை நன்கு பெய்தது.

இதனால் வழக்கம்போல் நெல் உள்ளிட்ட விவசாய பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு பராமரித்து வருகின்றனர். ஆனால் வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்யவில்லை. இதனால் விவசாய பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போகும் நிலை உள்ளது.

கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சி மற்றும் ஸ்ரீ மதுரை ஊராட்சி இணையும் பகுதியில் முக்கூர் என்ற இடத்தில் இருந்து 2 கி. மீ. தொலைவில் உள்ள குற்றிமுற்றி வரை பல ஆண்டுகளாக பாசன வாய்க்கால் இருந்தது. இதனால் கோடை காலத்திலும் விவசாய பயிர்களுக்கு தேவையான தண்ணீர் வசதியை விவசாயிகள் பெற்று வந்தனர். தற்போது பாசன வாய்க்கால் பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி கிடக்கிறது.

இதன்காரணமாக மழைக்காலத்தில் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் பொது மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. பின்னர் மழைக்காலம் முடிந்தவுடன் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி வறண்டு விடுகிறது. இதனால் இந்த வாய்க்காலை தூர்வாரி புதுப்பிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பல ஆண்டுகளுக்கு முன்பு முக்கூர் பகுதியில் பாசன வாய்க்கால்கள் கட்டும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஆனால் அதன்பின்னர் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டதால் வாய்க்காலை மண் போட்டு சிலர் மூடி விட்டனர். இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை (நீர்வளம்) அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயத்திற்கு தேவையான பாசன வசதி கிடைக்க புதர்மண்டி வாய்க்காலை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Similar News