செய்திகள்
தற்கொலை

கள்ளக்காதலன் மிரட்டியதால் பெண் தற்கொலை

Published On 2020-11-02 07:50 IST   |   Update On 2020-11-02 07:50:00 IST
கள்ளக்காதலன் மிரட்டியதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். பிணத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த முதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா (வயது 30). இவருடைய மனைவி குமாரி (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சிவண்ணா வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் வசித்து வருபவர் தினேஷ். தாளவாடியில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக தினேஷ் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 6 மாத கைக்குழந்தையும் உள்ளது.

எதிரெதிரே வீடு என்பதால் சிவண்ணா மனைவி குமாரியும், தினேசும் சாதாரணமாக பழகி வந்து உள்ளனர். பின்னர் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

இதனால் கடந்த சில வாரங் களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி தினேசுடன் குமாரி சென்றார். இதைத்தொடர்ந்து 2 பேரும் தாளவாடியில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே முதியனூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குமாரி சென்றார். இதனை அறிந்த சிவண்ணா நேற்றுமுன்தினம் அங்கு சென்று, குழந்தைகள் நலன் கருதி தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். இதைத்தொடர்ந்து சிவண்ணாவின் வீட்டுக்கு குமாரி சென்றார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சிவண்ணா வீட்டிற்கு வந்த தினேஷ், தன்னுடன் குமாரி இருந்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த குமாரி நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குமாரியின் பிணத்தை தினேஷ் வீட்டின் முன்பு வைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தினேஷ் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் கல்வீசி தாக்கினர்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தினேசை விரைவில் கைது செய்துவிடுவோம் என்றனர். இதையடுத்து குமாரியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான தினேசை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Similar News