செய்திகள்
செந்நாய்கள் கடித்து ஆடுகள் இறந்து கிடப்பதை வனத்துறையினர் பார்வையிட்டனர்

சேரம்பாடி அருகே செந்நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

Published On 2020-10-31 13:17 IST   |   Update On 2020-10-31 13:17:00 IST
சேரம்பாடி அருகே செந்நாய்கள் கடித்து 8 ஆடுகள் பரிதாபமாக பலியானது.
பந்தலூர்:

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே நாயக்கன் சோலை பகுதியை சேர்ந்தவர் கோபாலசாமி (வயது 54). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள புல்வெளியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டார். ஆனால் அந்த ஆடுகள் வீடு திரும்பவில்லை.

இதனால் கோபாலசாமி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் ஆடுகளை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. நேற்று 2- வது நாளாக ஆடுகளை தேடும் பணி நடைபெற்றது. அப்போது சேரம்பாடி அரசு தேயிலை தோட்டத்தில் செந்நாய்கள் கடித்து 8 ஆடுகள் இறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபாலசாமி இது குறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் வனச்சரக அதிகாரி சின்னதம்பி, வனவர் சசிகுமார், கார்டு ஜெயகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த ஆடுகளின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது பாதிக்கப்பட்ட கோபாலசாமி இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதியளித்தனர்.

இதேபோல் சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.2 திருவள்ளுவர் நகர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் விவேகானந்த ராஜா என்பவரின் பசு மாடு புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது சிறுத்தைப்புலி ஒன்று திடீரென பசு மாட்டை தாக்கியது.

அதை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் கூச்சலிட்டபடி சம்பவ இடத்தை நோக்கி ஓடினர். இதையடுத்து சிறுத்தைப்புலி அங்கிருந்து தப்பி ஓடியது. படுகாயங்களுடன் உயிர் தப்பிய பசுமாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News