செய்திகள்
விக்கிரவாண்டி அருகே கிணற்றில் முதியவர் பிணம்- கொலையா? போலீஸ் விசாரணை
விக்கிரவாண்டி அருகே கிணற்றில் முதியவர் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி அருகே உள்ள ஆவுடையார்பட்டு கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான வீட்டுமனை பிரிவில் உள்ள கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அதன்பிறகு கிணற்றில் பிணமாக மிதந்த முதியவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? எனவும், அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.