செய்திகள்
கறம்பக்குடி பஸ் நிலையத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை படத்தில் காணலாம்.

கறம்பக்குடியில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்

Published On 2020-10-23 09:23 GMT   |   Update On 2020-10-23 09:23 GMT
கறம்பக்குடியில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியில் 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். காலை, மாலை இரு வேளைகளிலும் பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா காலத்திலும் தூய்மை பணியாளர்களின் பணி தடையின்றி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அருகில் உள்ள பஸ் நிலையம் அருகே திரண்டு திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருவதாகவும், காலை உணவு சாப்பிட கூட அனுமதிப்பது இல்லை எனவும், தரக்குறைவாக நடத்தப்படுவதாகவும் கூறி பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கடை வீதிகளில் குப்பைகள் அதிகளவில் தேங்கின. இதுகுறித்து தகவலறிந்த பேரூராட்சி அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News