செய்திகள்
கோப்புபடம்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-22 11:41 GMT   |   Update On 2020-10-22 11:41 GMT
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:

தமிழ்நாடு கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருப்பதி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திருப்பதி வரவேற்றார்.

இதில் ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பின் தலைவர் அமல்ராஜ், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்க மாநில தலைவர் ராமர், மாநில ஒருங்கிணைப்பாளர் சர்தார், தூய்மை தொழிலாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், தூய்மை பணியாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தூய்மை காவலர்களுக்கு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட ரூ.1000-த்தை வழங்க வேண்டும். 2013-ம் ஆண்டிற்கு முன்பு பணியில் சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு அரசாணைப்படி சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 1,400 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம், பணிகொடை ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.

கொரோனா காலத்தில் பணி செய்த தூய்மை பணியாளர்களுக்கு வருடத்திற்கு 2 செட் சீருடை, கையுறை, முக கவசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News