செய்திகள்
28-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு
50 ஆண்டுகளாக ஆசிரியர்கள் பெற்றுவந்த ஊக்க ஊதியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து வருகிற 28-ந்தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
சிவகங்கை:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஆசிரியர்கள் பணியில் இருந்துகொண்டே பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், 1969-ம் ஆண்டில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி ஒரு ஆசிரியர் தனது பணிக்காலத்தில் தான் பெற்ற உயர் கல்விக்காக அதிகபட்சமாக 2 ஊக்க ஊதிய உயர்வுகளை கடந்த 50 ஆண்டுகாலமாக பெற்று வந்தனர்.
இந்தநிலையில் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்ட அரசாணையில் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10.3.2020 முதல் முன்ஊதிய உயர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தமிழகத்தில் ஆரம்பப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை பணியில் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பேரதிர்ச்சியையும், பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 50 ஆண்டு காலமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது நியாயமற்றது. எனவே உடனடியாக இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும். மேலும் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 40 ஆக குறைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக வருகிற 28-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.