செய்திகள்
போராட்டம்

28-ந்தேதி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்: வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கம் அறிவிப்பு

Published On 2020-10-21 08:20 GMT   |   Update On 2020-10-21 08:20 GMT
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வருவாய்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை:

வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் தர்மராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை உடனடியாக அமல்படுத்தி வருவாய் துறையில் பணிபுரியும் நேரடி நியமன அலுவலர்களுக்கு திருத்திய துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகளின்படி அனைத்து நேரடி நியமன உதவியாளர்களுக்கும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பயிற்சிகள் உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும். தகுதி பெற்றுள்ள நபர்களுக்கு காவல்துறை பயிற்சி, நீதித்துறை பயிற்சி போன்ற பயிற்சிகளை எவ்வித சுணக்கமுமின்றி மாவட்ட நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6-வது ஊதியக்குழுவில் நேரடி நியமன வருவாய் உதவியாளர்களுக்கு ரூ.9,300 என்ற ஊதிய விகிதத்திலும், வட்டாட்சியர்களுக்கு ரூ.15,600 என்ற ஊதிய விகிதத்திலும் ஊதிய மறு நிர்ணயம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்ற அரசு அலுவலர்களுக்கும் கருணைத்தொகையாக ரூ.2 லட்சம் மற்றும் உயிரிழந்த அரசு அலுவலர்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீட்டு தொகையான ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவை உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் பிரசார இயக்கமும், வருகிற 28-ந்தேதி கலெக்டர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News