செய்திகள்
கவர்னர் கிரண்பெடி

சண்டே மார்க்கெட் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்- கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்

Published On 2020-10-21 07:32 GMT   |   Update On 2020-10-21 07:32 GMT
சண்டே மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி நாள்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று வளர்ச்சி ஆணையர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலாளர் அருண், சிறப்பு செயலாளர் பங்கஜ்குமார் ஜா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதன்பின் கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சண்டே மார்க்கெட்டானது குறுகிய தெருக்களில் செயல்படுகிறது. எனவே கடைக்காரர்களுடன் கூட்டம் நடத்தி கூட்டத்தை சண்டே மார்க்கெட்டிற்கு வரும்வழி, வெளியேறும் வழி ஆகியவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும்.

அடுத்த வாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் குழுவானது புதுவைக்கு வர உள்ளது. அப்போது அவர்கள் புதுவையில் ஆய்வு நடத்தி தங்களது பரிந்துரைகளை வழங்குவார்கள்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகள், மதவழிபாட்டு தலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான செயல்பாட்டு வழிமுறைகளை உருவாக்கிட வேண்டும்.

சுகாதாரம் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். இதற்கான திட்டத்தை உள்ளாட்சித்துறை செயலாளர், ஸ்மார்ட் சிட்டி திட்ட இணை தலைமை செயல் அதிகாரி, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உருவாக்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தனியார் செக்யூரிட்டிகளை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News