செய்திகள்
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தபடம்.

மாநில நிதிக்குழு மானியத்தை வழங்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-20 09:44 GMT   |   Update On 2020-10-20 09:44 GMT
ஊராட்சிகளுக்கு வழங்கவேண்டிய மானிய நிதிக் குழு மானியத்தை வழங்கக்கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஊராட்சிகளுக்கு வழங்கவேண்டிய மாநில நிதிக்குழு மானியம் கடந்த 6 மாதமாக வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணி ஆணைகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலையிடுவதை நிறுத்த வேண்டும்.

பசுமை வீடு மற்றும் பிரதமரின் குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்களின் பயனாளிகள் ஊராட்சி மன்ற தீர்மானத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பின்பு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் தனி அலுவலர் என்ற பெயரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி ஆணை வழங்கி கையெழுத்திடுவதை நிறுத்த வேண்டும். 15-வது நிதிக்குழு மானிய நிதியில் அடிப்படை பணிகளை தேர்வு செய்து உடனடியாக பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி வெங்கடேஷ், மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் மானாமதுரை சண்முகநாதன், திருப்புவனம் ரவி, தேவகோட்டை பழனிவேல் உள்பட மாவட்டம் முழுவதையும் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மாவட்ட ஊரக வளர்ச்சித் முகமைதிட்ட இயக்குனர் வடிவேல் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
Tags:    

Similar News