செய்திகள்
மழை நீர் வீட்டுக்குள் புகுந்துள்ளதை படத்தில் காணலாம்

கிருமாம்பாக்கம் பகுதியில் பலத்த மழை: வீடுகளில் தண்ணீர் புகுந்தது

Published On 2020-10-19 04:30 GMT   |   Update On 2020-10-19 04:30 GMT
கிருமாம்பாக்கம் பகுதியில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.
பாகூர்:

மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்கள் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி புதுவையின் புறநகர் பகுதியான கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது.

பலத்த மழையால் தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. கிருமாம்பாக்கம் சிந்தாமணி நகரில் மழைநீர் செல்லும் பாதைகள் அடைபட்டதால், அந்த பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.

குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனே வெளியேற்றக்கோரியும், இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் நேற்று காலை சிந்தாமணி நகர் மக்கள் மறியல் செய்வதற்காக புதுச்சேரி - கடலூர் சாலை சந்திப்பில் திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்படி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், மின்சார மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியேற்றினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News