செய்திகள்
கோப்பு படம்.

சாத்தான்குளம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு

Published On 2020-10-16 19:27 IST   |   Update On 2020-10-16 19:27:00 IST
சாத்தான்குளம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சாத்தான்குளம்:

தட்டார்மடம் அருகே படுக்கப்பத்து மறக்குடி தெருவைச் சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி இசக்கிதாய். இவர்களுடைய மகன் சிவக்குமார் (வயது 15), அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், சிவக்குமார் பக்கத்து ஊரான நடுவக்குறிச்சி சண்முகபுரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஆதிலிங்கத்தின் லாரியில் கிளீனராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் உள்ள கல்குவாரியில் பாறாங்கல் லோடு ஏற்றுவதற்காக, ஆதிலிங்கத்துடன் லாரியில் சிவக்குமார் சென்றார். கல்குவாரியில் லாரி நின்றதும், லாரியின் மீதுள்ள தார்ப்பாயை எடுப்பதற்காக சிவக்குமார் மேலே ஏறினார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்து தவறி விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை பேய்க்குளம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சிவக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் போலீசார் விரைந்து சென்று, சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News